tirsdag den 22. juni 2010

விஜய் 37வது பிறந்த நாள்


நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஏராளமான ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.

டீக்கடையில் இரவில் வேலை செய்து கொண்டே பகலில் மாநகராட்சிப் பள்ளியில் படித்து 1200க்கு 1130 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பாண்டியராஜ் எனும் மாணவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஜய், அவரை இன்று நேரில் வரவழைத்தார். அந்த மாணவர் என்ன படிக்க விரும்புகிறார் எனக்கேட்டு அதற்கான முழுச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.

மேலும் விஜய் உதவியுடன் கம்ப்யூட்டர் கல்வி படித்து தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

இதே போல தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களைத் தத்தெடுத்துள்ள நடிகர் விஜய், அவர்களது கல்விக்கான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று படிக்க வைக்கிறார். விஜய்யின் மேலாளரும் மக்கள் தொடர்பாளருமான பிடி செல்வகுமார் இப்பொறுப்பை நேரடியாகக் கவனித்து வருகிறார்.

மாவட்டம்தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களையும் விஜய் ரசிகர் மன்றங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று விஜய் பிறந்த நாளையொட்டி காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்த தானம் வழங்கினர்.

காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.

காலை 11 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள அவரது ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்ல குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார். மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடந்து வருவதாக விஜய் தெரிவித்தார்.

பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Ingen kommentarer:

Send en kommentar