மதுரைக்கு வரும் நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு தர ரசிகர்களும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனராம்.
150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம்.
விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்ட விழாவாக மதுரையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது. விஜய் நடித்த படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையைத் தாண்டி வேறு ஒரு நகரில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
மேலும் காவலன் பட ரிலீஸின்போது மிகப் பெரிய சோதனைகளைச் சந்தித்து விட்டதால் வேலாயுதம் விழாவை மிகப் பெரிய விழாவாக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
மதுரைக்கு வரும் விஜய்க்கு, விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனராம். பின்னர் அங்கிருந்து 150 கார்கள் பின் தொடர விஜய்யை அழைத்துச்செல்கின்றனர். விழா மேடைக்கு விஜய்யை பிரமாண்ட பேரணி மூலம் அழைத்துச் செல்லவுள்ளனர்.
மேலும் நகர் முழுவதும் விஜய்யின் கட் அவுட்கள், வேலாயுதம் பட பேனர்கள் பெருமளவில் வைக்கப்படவுள்ளதாம். விழாவுக்கான ஏற்பாடுகளை படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்து வருகின்ற போதிலும், ரசிகர்களும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
விழாவில் வேலாயுதம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டு நேரடியாக மேடையில் பாடல்களைப் பாடவுள்ளனராம். கலகலப்பான நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய், நாயகிகள் ஜெனீலியா, ஹன்சிகா மோத்வானி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே கேசட்கள், சிடிக்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் செய்துள்ளதாம்.