tirsdag den 31. maj 2011

முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்!


தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற உறுதுணையாக இருந்தது போல, தொடர்ந்து நற்பணிகள் பல செய்து அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் விஜய்.

காவலன் பட பிரச்சனை தொடர்பாக விஜய்க்கும், தி.மு.க.,விற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த மோதல் விஜய்யையும், அவரது ரசிகர்களையும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வைத்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதிமுக., அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தமது ரசிகர்கள் செயல்பட்டதற்காக, அவர்களை அழைத்து விருந்து வைத்தார் நடிகர் விஜய்.

சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் நேற்று(29.05.11) மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், “நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டிய போது எனக்கு பெருமையாக இருந்தது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது. இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.

இனி மேலும் சமூக நலப்பணியை தொடர்ந்து செய்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, ஜெயலலிதாவின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில். இவ்வாறு விஜய் பேசினார்.

பின்னர் நிகழ்ச்சியில் நற்பணி மன்றத் தலைவராக இருந்த சி.ஜெயசீலன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பொறுப்புக்கு புஸ்ஸி ஆனந்த்தும், ஜி.பாஸ்கர் அவர்களும் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் இயக்க நிறுவனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சிறப்புரையாற்றி அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு விஜய், பிரியாணி விருந்து கொடுத்தார்.

Ingen kommentarer:

Send en kommentar