
அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய்.
கேரளாவில் வெற்றிபெற்ற 'பாடிகார்ட்' என்ற மலையாள படம், 'காவலன்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. 'பாடிகார்ட்' படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.
'காவலன்' படத்தில், விஜய்-அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். 'பாடிகார்ட்' படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் 'காவலன்' படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
விஜய் கூறுகையில், "இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் சொன்னார். என் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது, காதல் படம். அதிரடியான சண்டை காட்சிகளும் இருக்கும். மனம்விட்டு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இருக்கும்.
காவல்காரன் கிடைக்கல...
இந்த படத்துக்கு, 'டைட்டில்' பெரிய பிரச்சினையாக இருந்தது. முதலில், 'காவல்காரன்' என்று பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. வேறு சில பெயர்களுக்குப் பிறகு கடைசியாக, காவலன் என்ற பெயர் அமைந்து இருக்கிறது.
சித்திக் இயக்கத்தில், ஏற்கனவே ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அதில் வரும் நகைச்சுவை காட்சிகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, வடிவேல் தலையில் சுத்தியல் விழுகிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பேன்.
அசினுடன்...
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். சிறந்த நடிகை அவர். எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரண்டு படங்களைப்போலவே இந்த படமும் வெற்றி பெறும் எனண நம்புகிறேன்.
படப்பிடிப்பின் இடையில் அசின் இந்தி படத்துக்கு போய்விட்டார். 2 மாதங்களை வீணாக்க வேண்டாமே என்றுதான் வேலாயுதம் படத்தில் நடித்தேன்...,'' என்றார்.
அசின் பேசுகையில், "தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். காவலன் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். விஜய் படங்களில், இது வித்தியாசமான படமாக இருக்கும்.
மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு. என்னை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்.
விஜய்யுடன் மூன்றாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் 'காவலன்,' மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.''
நடிகர் வடிவேல், டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோரும் நிருபர்கள் மத்தியில் பேசினார்கள். மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் நன்றி கூறினார்.