onsdag den 22. september 2010
டைரக்டர் சித்திக் (காவலன்)
சில நாள் தாடி, ஊடுருவுகிற பார்வையில் புன்னகைக்கிறார். மலையாளத்தின் முக்கியமான இயக்குநர்.
"எனக்கு ஒவ்வொரு படமும் முக்கியம். அதில் மலையாளம், தமிழ்னு வேறுபாடு கிடையாது. மனதைத் தொடணும், அப்படியே மூட் செட் பண்ணிடுவேன். இப்போ, ஆறேழு மாசமா எனக்குள் உட்கார்ந்திருக்கிறது இந்த 'காவலன்'தான். இதில் வருகிற பூமிநாதன்... அதாங்க நம்ம விஜய், சொன்னா சொன்னதைச் செஞ்சே தீருவான். தன்னை நம்புறவங்களை அள்ளி அணைச்சுத் தூக்கிச் சுமக்கிற மனுஷன். அவன் தூக்கிச் சுமக்கிற ஒரு விஷயம்... அதுக்குள் நடக்கிற அதிரடியான, அழகான விஷயங்கள்தான் படம்!"
மேலும் படங்களுக்கு...
"இன்னும் சொன்னால் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே?"
"முத்து ராமலிங்கம்னு அழைக்கப்படுகிற ராஜ்கிரண். ஒரு காலத்தில் ஊரையே குலை நடுங்கவைத்த பெரிய தாதா அவர். எதுவும் வேண்டாம்னு ஒதுங்கி, அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பும் அவருக்கு ஒரே ஒரு பொண்ணு... அசின். தன்னோட பெண்ணுக்குக் காவலனா விஜய்யை நியமிக்கிறார் ராஜ்கிரண். கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அந்தக் குடும்பத்துக்கும் அசினுக்கும் நெருக்கமாகிற விதம்... அவர்களின் அடையாளம் தெரியாத காதல்... அது கல்யாணத்தில் முடிந்ததா, என்னதான் நடந்தது? விஜய்யின் காமெடித் திறமை இதில் இன்னும் பளிச்னு வந்திருக்கு. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தை எவ்வளவு தூரம் எல்லோரும் ரசிச்சுப் பார்த்தோம். அந்த ஃப்ளேவர் இதில் இன்னும் தூக்கலா இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்டர்டெயின்மென்ட் செய்யும் படம். ஒரு படத்துக்கு இதைவிட சர்ட்டிஃபிகேட் வேறு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன்!"
"இப்போ விஜய் அவசியமா ஒரு ஹிட் தேவைப்படுகிற நெருக்கடியில் இருக்கார். தெரியும்தானே?"
"அப்படி ஒரு நெருக்கடி விஜய்க்கு இல்லைன்னு நினைக்கிறேன். ஜனங்க எதிர்பார்த்த மாதிரி சில படங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு படத்திலும்விஜய்யின் உழைப்பு, திறமை கொஞ்சம்கூடக் குறையவே இல்லை. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நடிக்கும்போது விஜய் ஒரு ஸ்டார்தான். இப்போ விஜய் இங்கே பெரிய ஸ்டார். ஆனால், அதே அமைதி, உள்வாங்கிக்கிற அழகு, அதிசயக்கவைக்கிற டைமிங், பெர்ஃபெக்ஷன்னு எல்லோரும் கத்துக்க வேண்டியதுதான் அவர்கிட்டே இருக்கு. நானோ, அவரோ, எந்த நெருக்கடியிலும் இல்லை. எல்லா ஹீரோக்களுக்கும் விஜய்க்கு வந்த மாதிரி சின்ன ஒரு இடைவெளி வரும். எல்லோரையும் மாதிரி விஜய் மேலே எழும்பி வருவார்... இன்னும் வேகமா!"
"மலையாள ஒரிஜினல் 'பாடிகார்ட்'ல நயன்தாரா இருந்தாங்க..."
"அந்தப் படத்துக்கும் நான் தேதி கேட்டது அசின்கிட்டேதான். அவங்க அப்போ ஒரு இந்திப் படம் முடிக்கிற கடைசி நாட்களில் இருந்தாங்க. எனக்கோ ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதான் நயன்தாரா வந்தாங்க. தமிழ்ல ஆரம்பிச்சதும் அசின் வந்துட்டாங்க!"
"நீங்களே திலீப்பை வெச்சு 'பாடிகார்ட்' பண்ணி இருக்கீங்க. இப்போ, இங்கே விஜய். யார் பெஸ்ட்னு உங்களால் சொல்ல முடியும்தானே?"
"மலையாளத்தில், திலீப்தான் சரியான சாய்ஸ். எங்க மொழிக்கு திலீப்பைவிட்டால், யாரும் அவ்வளவு சரியா செய்திருக்க முடியுமான்னு சந்தேகம். ஆனால், இங்கே விஜய் லைஃப் சைஸ் ஹீரோ. அவருக்கு ஏற்றபடி, பொருத்தமா சில மாற்றங்கள் இருக்கு. நிச்சயம் மலையாள ரோலை விஜய் பண்ண முடியாது. அதே மாதிரி தமிழ் விஜய் ரோலை திலீப் செய்யவே முடியாது!"
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar